தினமலர் 27.08.2012
மேலபாளையம் மண்டல துப்புரவுபணி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
திருநெல்வேலி:மேலப்பாளையம் மண்டலத்தில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு மற்றும் பொது சுகாதார பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நெல்லை மாநகராட்சிக்குட்பட பகுதிகளில் மொத்தம் 4.78லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினமும் 154.42 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகளை சேகரித்தல், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், பொதுக்கழிப்பிடங்களை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நெல்லை மாநகராட்சி அந்தஸ்து பெற்றதிலிருந்து இதுவரை 335 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 800க்கும் மேற்பட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அடிக்கடி கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவதாலும், துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லாததாலும் திடக்கழிவு மேலாண்மை பணி பாதிக்கப்படுகிறது.
இதற்கிடையே சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அடிக்கடி கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவதாலும், துப்புரவு பணியாளர்கள் போதிய அளவு இல்லாததாலும் திடக்கழிவு மேலாண்மை பணி பாதிக்கப்படுகிறது.
மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தேக்கமடைவதை தவிர்க்க மேலப்பாளையம் மண்டலத்தின் திடக்கழிவு பணிகளை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 110 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 135 துப்புரவு பணியாளர்கள் மற்ற மண்டலங்களுக்கு மாற்றுவதன் மூலம் பொது சுகதார பணிகள் எவ்வித சிரமமும் இன்றி மேற்கொள்ள முடியும். மேலும் தனியார் நிறுவனம் மூலம் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்வதால் மாநகராட்சிக்கு ஆண்டிற்கு 136லட்சம் சேமிப்பாகிறது.
மேலப்பாளையம் மண்டல பொதுசுகாதார நலன் கருதி திடக்கழிவு மேலாண்மை பணியினை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதற்கான தீர்மானம் வரும் 30ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கவுள்ள மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.