மேலமடை பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு தடை
மேலமடை பகுதிகளில் 3 மாதங்களுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கக் கூடாது என, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா பொறியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி வார்டுகள் எண். 29 முதல் 32 வரையிலான மஸ்தான்பட்டி, மேலமடை, தாசில்தார் நகர், வண்டியூர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தொடர்பாக புதன்கிழமை மேலமடை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் மேயர் விவி. ராஜன்செல்லப்பா ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசுகையில், மங்களக்குடியில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வந்து, இப்பகுதி நீர்நிலைத் தொட்டிகளில் நிரப்பி விநியோகிக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தொட்டிகள் வைத்து, கூடுதலாக குடிநீர் லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வந்து நிரப்பவும், தேவையான இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும். இப்பகுதிகளில் 3 மாதங்களுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகளை பொறியாளர்கள் வழங்கக் கூடாது என்றார்.
கூட்டத்தில் ஆணையர் ஆர். நந்தகோபால், பொறியாளர் (பொறுப்பு) அ. மதுரம், நகர்நல அலுவலர் யாசோதாமணி, மாமன்ற உறுப்பினர்கள் எம். மோகன், ஜெயக்குமார், சுசீந்திரன், ராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.