தினமலர் 08.06.2010
மேலூர் நகராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட விளக்க கூட்டம்
மேலூர்,: மதுரை மாவட்டத்தில் மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள் மற்றும் பரவை, விளாங்குடி, திருநகர், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ. 806 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மேலூரில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தண்ணீர் பெறப்படும் இடம், வரும் வழித் தடங்கள், மேல் நிலை தொட்டிகள் அமைய உள்ள இடங்கள், அரசின் மானியம், அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அளிக்க வேண்டிய பங்கீட்டு தொகை குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்.
குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பெரியசாமி கூறியதாவது : 2012 முதல் செயல்பட உள்ள இத் திட்டம் 2042 வருடத்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் துவங்கியவுடன், மேலூர் மக்களுக்கு தினசரி 37 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படும். மதுரை மாவட்டத்திற்கு தினசரி 640 லட்சம் லிட்டர் சப்ளை செய்யப்படும். ஏற்கனவே மேலூர் காந்திஜி பூங்காவில் உள்ள 4 மேல்நிலை தொட்டிகளுடன் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்படும். இங்கு தண்ணீரை தேக்கி மேலூர் நகரில் 27 வார்டுகளுக்கும் வழங்கப்படும். மேலூர் நகரில் மட்டும் ஏழரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும். மொத்த திட்ட மதிப்பீடான ரூ. 806 கோடி ரூபாயில் மேலூர் பகுதிக்கு 24.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தொகையில் 90 சதவிதம் அரசு மானியமாகவும், 10 சதவிதம் நகராட்சி பங்கீடாகவும் இருக்கும் என்றார். குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் நாராயணன், உதவி பொறியாளர்கள் சோலையப்பன், சந்திரசேகரன் கலந்து கொண்டனர். மேலூர் நகராட்சியில் இருந்து 10 சதவித பங்கீட்டு தொகை தருவதற்கு நிதி இல்லை; அனைத்து தொகையையும் அரசே ஏற்க வேண்டும் என்று நகராட்சி தலைவர் தமிழரசி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றி அரசிற்கு அனுப்பபட்டது.