தினகரன் 14.06.2010
மைசூரில் வெளிவட்ட சாலை மேம்படுத்தும் பணி
மைசூர், ஜூன் 14: மைசூரில் வெளிவட்டச் சாலையை 6 வழி சாலையாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
கர்நாடகாவில் பெங்களூருக்கு அடுத்தபடியாக மைசூர் இரண்டாவது பெரிய நகரமாக மாறிவருகிறது. மேலும் புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகவும், வாகனங்கள் பெருக்கமும் வளர்ந்து வருகிறது. இதை மனதில் வைத்து அவுட்டர் ரிங் சாலை ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்டது.
மைசூர்&பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழக்கு பகுதியை இணைக்கும் 7.49 கி.மீ. தூரத்திற்கு 4 வழி சாலை மற்றும் 2 வழி சாலையான 24.72 கி.மீ. தூரம் 6 வழி சாலையாக மேம்படுத்தப்படும்.
அவுட்டர் ரிங் சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.21,902.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.17ஆயிரத்து 522 லட்சம் வழங்குகிறது. மாநில அரசும், மைசூர் நகரவளர்ச்சி துறையும் தலா ரூ.2,190.25 லட்சம் வழங்குகிறது. தற்போதைக்கு மத்திய அரசு ரூ.4,380.49 லட்சம் முதல் தவணையாக வழங்கியுள்ளது. மாநில அரசும் மைசூர் நகரவளர்ச்சி துறையும் தலா ரூ.547.56 லட்சம் விடுவித்தது.
முதல்கட்டமாக வெளிவட்டச் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள இடிந்த கட்டட குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளை சமன் செய்யும் பணியும் நடந்து வருகின்றன.
முடா திட்ட அமலாக்க ஏஜென்ஸியாக இருந்தும் ஒப்பந்தத்தை கே.எம்.சி. தனியார் நிறுவனத்திற்கு 4 பேக்கேஜ்களாக 3 ஆண்டுகளுக்கு பாரமரிப்பு ஒப்பந்தமாக விட்டுள்ளது. கடந்த ஏப்.12ல் தொடங்கிய இந்த திட்டம் பிப்ரவரி 2011ல் நிறைவடையும். ரூ.219 கோடி இத்திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கட்டட நிறுவனம் ரூ.210.84 கோடியில் முழுமை செய்ய முன்வந்துள்ளது.
இரும்பில் உள்ள தெருவிளக்கு கம்பங்களை அகற்ற ரூ.2 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1 கோடி கான்கீரிட் கம்பங்கள் அமைக்க செலவழிக்கப்படும். நஞ்சன்கூடு&பன்னூர் சாலையை மேம்படுத்தும் விரிவான திட்ட அறிக்கையை முடா தயாரித்து வருகிறது.
மாநில அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்து அனுமதி பெற இருக்கிறது. விரைவில் அவுட்டர் ரிங் சாலை 6 வழி சாலையாக மாற்றம் பெறுவதற்கு மேலும் ரூ.100 கோடி தேவைப்படுகிறது.