தினகரன் 31.08.2010
யானைகளிடம் இருந்து சத்துணவு மையங்களை பாதுகாக்க வேண்டும் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
வால்பாறை, ஆக. 31: வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். 18 புதிய நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சேர்க்க வரப்பெற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நகராட்சி வளர்ச்சிப்பணிகள் அதிகரிக்கப்படும்போது சேர்த்துக்கொள்ளலாம் என நகராட்சி தலைவர் கூறியதால் மன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. வளர்ச்சி பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரியில்லா இனங்களான வாடகை, ஏல பாக்கி, நிலவாடகை உள்ளிட்டவைகளில் இருந்து நகராட்சிக்கு பெறப்படும் வருவாய் ஏறத்தாழ ரூ.40 லட்சம் பாக்கி விரைவில் வசூலிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கவுன்சிலர் சுதாகர் பேசுகையில் ‘தமது வார்டு பகுதியான சின்கோனா, உபாசி பகுதிகளில் யானைகளால் சத்துணவு மற்றும் ரேஷன் கடைகள் கொள்ளையடிக்கப்படுவதால் சத்துணவு கூடங்கள் மாடியுடன் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என கோரிக்கைவிடுத்தார். இதற்கு பதில் அளித்து நகராட்சி தலைவர் பேசுகையில் ‘எதிர் காலங்களில் கட்டப்படும் சத்துணவு மையங்கள் நவீனமாக கட்டப்படும். யானைகள் உடைக்காதவாறு மாடியுடன் உயர் தொழில் நுட்பத்தில் கட்ட புதிய வரைபடம் தயாரித்து, மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று வனத்துறை, ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசித்து கட்டிடங்கள் கட்டப்படும்’ என்றார்.