மாலை மலர் 10.08.2009
யாழ்ப்பாணம் மாநகராட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி வெற்றி– வவுனியாவை விடுதலைப்புலி ஆதரவு கட்சி கைப்பற்றியது
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 09, 1:01 PM IST
கொழும்பு, ஆக. 9-
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இலங்கையின் வடகிழக்குப் பகுதியான முல்லைத்தீவு விடுதலைப்புலிகள் வசம் இருந்தது. அங்கு நடந்த இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போருக்கு பின் தமிழர் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைகளுக்கான (மாநகராட்சி) தேர்தல் நேற்று நடந்தது.
யாழ்ப்பாணம் மாநகர சபை தேர்தலில் அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டன.
ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உள்ளூர் போலீசாருடன் ராணுவத்தினர் வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டனர். வாகன சோதனையும் நடந்தது. ஓட்டளிக்க வந்த ஆண்களும், பெண்களும் கடுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் வாக்காளர்களிடையே ஓட்டுப்போடும் ஆர்வம் குறைந்தது. 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை மட்டுமே ஓட்டுக்கள் பதிவானது.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 417 பேர். இவர்களில் 22,280 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இதில் 1,358 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இன்று அதிகாலையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 23.
இதில் அதிபர் ராஜபக்சேயின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் அந்த கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 8 இடங்களே கிடைத்தன.
இங்கு ஐக்கிய தேசிய கட்சியும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஈ.பி.டி.பி.யும் தேர்தல் வெற்றி பெற பல்வேறு யுத்திகளை கையாண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதேபோல் வவுனியா மாநகரசபை தேர்தலிலும் மந்தமான வாக்குப்பதிவு நடந்தது. மாலை 4 மணி வரை 25 சதவீத வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடிவடைந்தபோது 35 சதவீதம் பேர் ஓட்டு அளித்தனர்.
வவுனியாவிலும் இன்று அதிகாலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இங்கு மொத்த இடங்களின் எண்ணிக்கை 13. இதில் விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்ட மைப்பு 8008 ஓட்டுகளைப் பெற்று 8 இடங்களை கைப்பற்றியது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3,045 ஓட்டுகள் பெற்று 2 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 587 ஓட்டுகள் பெற்ற 1 இடத்தை பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சி 7 இடங்களையும், ஜே.வி.பி. 1 இடத்தையும், மலையக மக்கள் முன்னணி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.