தினமலர் 15.06.2010
ரத்த வங்கி துவங்க மாநகராட்சி திட்டம்
சென்னை : சென்னை மாநகராட்சி அரசு மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில், ரத்த வங்கி தொடங்க திட்டமிட்டுள்ளதாக மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட அரசு ரத்த வங்கிகள் இணைந்து, சென்னை மருத்துவ கல்லூரியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை கொண்டாடியது. மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் தம்பு கலோலிக்கர், சென்னை மருத்துவ கல்லூரி டீன் மோகனசுந்தரம், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி டீன் கனகசபை, அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வேணி, ஆர்.எம்.ஓ., முத்துராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.அதிக முறை ரத்ததானம் செய்தவர்களுக்கும், அதிக ரத்ததானம் செய்த நிறுவனங்களுக்கும் மேயர் சுப்ரமணியன் விருதுகளை வழங்கி கூறியதாவது:அரசு பொது மருத்துவமனையில், 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள நடமாடும் ரத்த வங்கி மூலம் 8,000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் செய்யும் கொடையாளர்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம், ரத்த வங்கி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரத்தம் சேகரிப்பு செய்து, மாநகராட்சி சார்பில் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கு ரத்தம் இலவசமாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு மேயர் கூறினார்.