தினமலர் 19.02.2010
ரயில்வே பாலம் கட்டுவதற்கு தோண்டிய குழியில் கழிவு நீர் : நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வு
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் ரயில்வே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருக்கும் கழிவு நீரால் சுகாதாரம் பாதிக்காமல் இருக்க நகராட்சி சுகாதாரப்பிரிவில் ஆய்வு செய்தனர். கோவை – பொள்ளாச்சி அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்காக, பொள்ளாச்சியில் வடுகபாளையம் பிரிவு அருகில் குழி தோண்டப்பட்டுள்ளது. பாலம் கட்டுவதற்கு தாமதமாவதால், அந்த குழியில் குடியிருப்பு பகுதிகளின் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் மெயின் ரோட்டோரத்தில் குழி உள்ளது. இதனால் ஆபத்து உள்ளது என்பதையும், கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி குளமாக மாறிவிட்டது பற்றியும் தினமலரில் செய்த வெளிவந்தது. அதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரப்பிரிவு மூலம் கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியை ஆய்வு செய்ய கமிஷனர் வரதராஜ் உத்தரவிட்டார். சுகாதாரப்பிரிவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், ஜெரால்டு, செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவு நீர் வரும் பாதையில் குழி தோண்டப் பட்டுள்ளது. தேங்கியிருக்கும் கழிவு நீர் வெளியேறுவதற்கு அங்கு ஏற்கனவே கழிவு நீர் வெளியேறும் பாதை உள்ளது. அதன்வழியாக கழிவு நீரை வெளியேற்றுவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கழிவு நீர் வெளியேறும் பாதையை சுத்தம் செய்துள்ளோம். பாலம் கட்டி முடிக்காமல் அங்கு தேங்கியிருக்கும் கழிவு நீரை முழுமையாக வெளியேற்ற முடியாது. அதனால், கழிவு நீர் தேங்கியிருக்கும் குழியில் “ஆயில் பால்‘ போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கழிவு நீரின் மேற்பரப்பு முழுவதும் ஆயில் பரவிவிட்டால் கொசு உற்பத்தி ஆகாது. மேலும், பாலம் கட்டும் பணியை வேகப்படுத்தி, அங்கிருக்கும் குழியை அடைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்படுகிறது என்றனர.