தினமலர் 11.06.2010
ராஜபாளையத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் தேவை
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாளையம் நகராட்சி பகுதியில் 42 வார்டுகள் உள்ளன. தொழில்நகரமாக இருப்பதால், ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் வசித்து வந்த போதிலும், அதற்கேற்ப வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. குறிப்பாக மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், ராஜபாளையத்தில் அதற்கான முயற்சிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படவில்லை.சுகாதார பாதிப்பு: தற்போது பல வீடுகளில் கழிப்பறை உள்ள போதும், செப்டிக் டேங்குகளில் கழிப்பறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சேமித்து, பின் அவற்றை பாதுகாப்பாக அகற்றும் பழக்கத்தை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை. பலரும், வாறுகாலிலேயே கழிவுநீரை வெளியேற்றி விடுகின்றனர். செப்டிக் டேங்க் நிரம்பிவிட்டால், அதை சுத்தப்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால், பல வீடுகளிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சுகாதாரத்தை கடைப்பிடிக்க செய்வது சிரமமாக உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது தான் ஒரே தீர்வு. இதை உணர்ந்து, தகுந்த நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.