தினமலர் 26.03.2010
ராஜ்பவன் பகுதி குடியிருப்புகளுக்கு தண்ணீர் இணைப்பு ‘கட்!’: வரி செலுத்தாததால், நகராட்சி நிர்வாகம் அதிரடி
ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பு பகுதியில், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலரின் தண்ணீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது; 1989ம் ஆண்டு முதல், குடியிருப்புகளுக்கு விதிமீறி இணைப்பு எடுக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ராஜ்பவன் பகுதியில், அரசு குடியிருப்புகள் 88 கட்டப்பட்டுள்ளன; 1989ம் ஆண்டு முதல் பொதுப்பணித் துறையின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது, ராஜ்பவன் பகுதியில் பணிபுரியும் ஊழியர்களை தவிர, மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக, இப்பகுதியில் வசிப்பவர்கள், பொதுப்பணித்துறை சார்பிலோ அல்லது குடியிருப்போர் சார்பிலோ, தண்ணீருக்கு வரி கட்டவில்லை. ஆனால், மின்கட்டணம், வீட்டு வாடகைக் கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போதுள்ள நகராட்சி நிர்வாகம், தண்ணீர் உட்பட சொத்து வரி வசூலிப்பதில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த ஆய்வில், ராஜ்பவன் பகுதியில் உள்ள 88 குடியிருப்புகளில், வருவாய் அலுவலர் குடியிருப்பு உட்பட அனைத்து குடியிருப்பிலும் தண்ணீர் வரி கட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், 2000ம் ஆண்டு முதல் செலுத்த வேண்டிய தண்ணீர் வரி மட்டும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 944 ரூபாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஒரு வீட்டுக்கு 8,488 ரூபாய் நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பலர் பல்லாண்டுகளாகவும், சிலர் ஓராண்டாகவும் வசித்து வருவதால், தொகையை செலுத்த முடியாது எனக் கூறியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை பொறியாளர் அலுவலகத்தில் புகார் செய்த போது, தண்ணீர் பயன்படுத்தியவர்களிடம் வரி வசூல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னும் வரி வசூலிக்க முடியாததால், மாவட்ட வருவாய் துறை அலுவலர் குடியிருப்பு உட்பட 88 குடியிருப்புகளுக்கான தண்ணீர் இணைப்பு, இரு நாட்களுக்கு முன் துண்டிக்கப்பட்டது. விசாரணையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், ராஜ்பவன் கட்டடத்துக்காக தனியாக வழங்கப்பட்ட ஒரு குழாய் இணைப்பு, குடியிருப்பில் உள்ளவர்கள் விதிமீறி, அனைத்து குடியிருப்புகளுக்கும் இணைப்பை கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என, நகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அரசுத் துறையை சேர்ந்தவர்களே, விதிமீறி செயல்பட்டது, வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி கமிஷனர் கிரிஜாவிடம் கேட்டபோது, ”ராஜ்பவன் பகுதியில் உள்ள 88 குடியிருப்புகளில் வசிப்பவர்கள், கடந்த 30 ஆண்டுகளாக தண்ணீர் வரி கட்டவில்லை. தண்ணீர் இணைப்பு எடுத்துள்ளதிலும் விதிமீறல் நடந்துள்ளது; இதனால், இணைப்பு துண்டிக்கப்பட்டது. வரி செலுத்தினால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும்,” என்றார்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை: இரு நாட்களாக தண்ணீர் கிடைக்காததால் அவதிப்பட்ட ராஜ்பவன் குடியிருப்பு மக்கள், நேற்றுமுன்தினம் காலி குடங்களுடன் பொதுப்பணித் துறை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ‘முன்னறிவிப்பு இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கோடை காலத்தில் தங்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது‘ என கோஷம் எழுப்பினர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு, இப்பிரச்னை குறித்து விசாரித்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் குடிநீர் செலுத்தவில்லை; இதனால் தான் நகராட்சி அதிகாரிகள் வினியோகத்தை நிறுத்தி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை, நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோஷம் எழுப்பினர்.