தினகரன் 04.09.2010 ராணி மங்கம்மாள் சிறை வைக்கப்பட்ட இடம் மூடிய சென்ட்ரல் மார்க்கெட்டில் விலை உயர்ந்த தேக்கு
மதுரை, செப். 4: மதுரையில் ராணி மங்கம்மாள் சிறை வைக்கப்பட்ட இடமான சென்ட்ரல் மார்க்கெட் இழுத்து மூடப்பட்டது. கட்டிடங்களில் விலை உயர்ந்த தேக்கு மர உத்திரம் மற்றும் மரச் சாமான்கள், அழகிய உருக்கு தூண்கள், கற்கள், ஓடுகள் இருப்பதால், மதிப்பீடு தயாரித்து ஏலத்துக்கு விட்டு இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை கவர்னர் ஆர்தர்லாலே
1906நவ.21ல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் அமைத்தார். 5 ஏக்கர் 80 சென்ட் இடத்தில் 260 கடைகள் கொண்ட இம்மார்க்கெட், நகர் நெரிசலை தடுக்க மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட் முற்காலத்தில் மீனாட்சிகோயில் கட்டுமானப்பொருட்கள், மற்றும் யானைகளை கட்டி வைக்க பயன்பட்டிருக்கிறது. பிறகு ராணிமங்கம்மாள் (1680&1706) அரண்மனைப் பகுதியாகவும், தொடர்ந்து மதுரையின் முதல் சிறைச்சாலையாகவும் இருந்திருக்கிறது.ராணிமங்கம்மாளை பேரன் விஜயரங்க சொக்கநாதன் இங்குதான் சிறை வைத்தார்
. ராணிமங்கம்மாள் இறக்கும் வரை இங்குதான் சிறையிலிருந்தார். 1801ல் பிரிட்டிஷ் அரசு அமைந்தது. 1840ல் மதுரையைச் சுற்றிய கோட்டையை பிளாக்பர்ன் இடித்து விரிவுபடுத்தினார். 1869ல் புதுஜெயில் கட்டும் வரை மீனாட்சி கோயில் அருகில் மார்க்கெட் அமைதிருந்த இடம் தான் ஜெயி லாக இருந்தது. இங்கு 1906ல் மார்க்கெட் உருவானது. இங்கு ராணிமங்கம்மாள் வணங்கிய பழமையான காளி கோயிலை இன்றும் ‘ஜெயில் காளி’ என்கின்றனர்.மார்க்கெட் மாட்டுத் தாவணிக்கு மாற்றம் செய்யப்பட்டதும்
, இங்கு பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க மத்திய சுற்றுலாத்துறை ரூ. 3 கோடி அனுமதித்துள்ளது. பழமையான மார்க்கெட் கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மார்க்கெட் கட்டிடத்தை ஆணையாளர் செபாஸ்டின்
, தலைமை பொறியாளர் சக்திவேல், முதன்மை நகரமைப்பு அதிகாரி முருகேசன் நேற்று பார்வையிட்டனர். கட்டிடத்தில் விலை உயர்ந்த பொருட்கள் நிறைந்திருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.கட்டிடம் தலா பத்தடி உயரம் கொண்ட
500&க்கும் மேற்பட்ட உருக்கு இரும்புத்தூண்களும், மர உத்திரம், ஓடுகவிழ்த்தி தேக்குமரத்தினாலான உள்கூரைப்பகுதிகளும் கொண்டிருக்கின்றன. உயரமான இடத்தில் கம்பிவலை பின்னப்பட்ட கதவுகளும், சுவர்களும் கொண்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட அறைகள், மணிக்கூண்டு என அற்புத பழமைப் பொக்கிஷமாக உள்ளது. இந்த உருக்கு இரும்புத் தூண்களுக்குக் கீழே தரைக்கென பதிக்கப்பட்டிருக்கும் ஒருவகை கடப்பா கற்கள் உள்ளன. பல்லாண்டுக்கு முன்பு இவ்விடத்தில் பல ஆயிரம் லோடு ஆற்றுமணல் கொட்டி அதன் மீதே அரண்மனை கட்டப்பட் டது. இன்றும் இங்கு பள்ளம் தோண்டினால் ஆற்றுமணலை அள்ள முடிகிறது.வெளி ஆட்கள் நுழைய முடியாதபடி மார்க்கெட் இழுத்து மூடப்பட்டது
. மார்க்கெட்டின் கூரைப் பகுதிகள் மற்றும் படிக்கட்டுகள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டன. விலை உயர்ந்த பொருட்களுடன் உறுதி யான கட்டிடமாக இருப்பதால், மதிப்பீடு தயாரித்து ஏலத்துக்கு விட்டு முழுமை யாக இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மன்னர்கள்
, ஆங்கிலேயர்கள், மக்களாட்சி என முக்காலச் சிறப்பு கொண்ட இந்த மார்க்கெட் கட்டிடப் பகுதியை அரசு சீரமைத்து நினைவுச் சின்னமாக்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.