ராமநாதபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது: நகர்மன்ற தலைவர் தகவல்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளதால் கோடை மாதங்களான ஏப்ரல்,மே மாதங்களில் ராமநாதபுரம் நகரில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது என நகர்மன்ற தலைவர் கவிதா சசிக்குமார் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
நகர்மன்ற கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் ,பல்வேறு சதிகளையும் முறியடித்து விடாமுயற்சி மேற்கொண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடக் காரணமாக இருந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தமிழக மக்களும் குறிப்பாக டெல்டா விவசாயிகளும் இதற்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டதால் காவிரி நீரை கர்நாடகம் இனி தரமுடியாது என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. காவிரி நீர் திறந்து விடப்பட்டால் ராமநாதபுரம் நகரில் உள்ள குடிநீர் இணைப்புகள் அனைத்திற்கும் காவிரி தண்ணீர் கிடைக்கும். முக்கியமாக கோடையில்,ஏப்ரல்,மே மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. சுமார் 40லட்சம் மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் எனவும் கவிதா சசிக்குமார் பேசினார்.
கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் முஜ்புர் ரகுமான்,பொறியாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.