தினமலர் 26.04.2010
ரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை அகற்றிக் கொள்ள ‘அட்வைஸ்‘
அவிநாசி : ”ரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை, ஒரு மாதத்துக்குள் தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், அரசே அகற்றும்,” என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்துள்ளார்.திருமுருகன்பூண்டி பேரூராட்சி, ராக்கியாபாளையத்தில் இலவச ‘டிவி‘ வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜம்புநாதன் வரவேற்றார்.
கலெக்டர் சமயமூர்த்தி பேசுகையில், ”திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில், முதல்கட்டமாக 5,276 குடும்பத்துக்கு இலவச ‘டிவி‘ வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 273 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது ஆறாவது பேரூராட்சியாக திருமுருகன்பூண்டியில் வழங்கி வருகிறோம்,” என்றார்.
பயனாளிகளுக்கு ‘டிவி‘ களை வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. இங்கு செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. பேரூராட்சி தலைவர், எந்த கட்சியை சேர்ந்தவர் என்று பாகுபாடு எதையும் பாராமல், முதல்வர் சேவையாற்றி வருகிறார். இப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை அதன் உரிமையாளர்கள் இன்னும் ஒரு மாதத்தில் அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் அரசே அகற்றி, சாலை விரிவாக்கம் செய்யப்படும்.
போக்குவரத்து நெருக்கடி குறித்து அறிந்த பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் கடந்த 2006 முதல் நடப்பாண்டு வரை 365 பணிகள் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இன்னும் பல பணிகள் நடக்க உள்ளன. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.முன்னதாக, அம்மாபாளையம் – ராம்நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.11 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன், தாசில்தார் சென்னியப்பன், பேரூராட்சி தலைவர் கோபால், ஒன்றிய நியமன குழு உறுப்பினர் சாமிநாதன், நகர தி.மு.க., செயலாளர்கள் குமார் (பூண்டி), ரவி (அவிநாசி) உட்பட பலர் பேசினர். செயல் அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்.