தினமலர் 20.01.2010
ரோட்டில் கழிவுநீர் ஓட்டல்களுக்கு ‘சீல்‘
சென்னை : பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில், கழிவு நீரை சாலையில் ஓட விட்ட, மூன்று ஓட்டல்களுக்கு மாநகராட்சியினர் “சீல்‘ வைத்தனர்.சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் அருகில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஜெயந்தி ஓட்டல், முல்லை ஓட்டல் மற்றும் காசா ஓட்டல்கள் ஆகியவை செயல்படுகின்றன. இந்த ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் சேர்வதால், சுகாதார கேடு ஏற்படுத்துவ தாக மாநகராட்சிக்கு தொடர்ந்து, புகார்கள் வந்தன.மேலும், நேற்று காலை மேயர் சுப்ரமணியன், ரிப்பன் கட்டடத்திற்கு வந்து கொண்டிருந்த போது, குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் இருந்து, கழிவு நீரை கொண்டு வந்து சாலையில் கொட்டுவதை பார்த்துள்ளார்.இதனால், அந்த ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.அதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறையினர், கழிவு நீரை சாலையில் விட்டு, சுகாதார கேடு ஏற்படுத்துவதாக கூறி, குறிப்பிட்ட மூன்று ஓட்டல்களுக்கும் நேற்று மாலை “சீல்‘ வைத் தனர்.