தினகரன் 24.08.2012
ரோட்டோரத்தில் அபாயகரமான கிணற்றை மூட தனியார் நிறுவனத்துக்கு பேரூராட்சி உத்தரவு
கோவை:கோவை-பாலக்காடு ரோட்டில், மதுக்கரை டோல் பிளாசா அருகில் உள்ள, அபாயகரமான தரைமட்ட கிணற்றை, உடனே மூடிவிடுமாறு, “எல் அண்ட் டி’ நிறுவனத்துக்கு, பேரூராட்சி உத்தரவிட்டுள்ளது.கோவையில் இருந்து, பாலக்காடு செல்லும், எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில், மதுக்கரை டோல் பிளாசா உள்ளது. இதன் அருகில், ரோட்டை ஒட்டியவாறு அபாயகரமான தரைமட்ட கிணறு உள்ளது. இந்த கிணறு ரோட்டோரத்தில், எந்த தடுப்புச் சுவரும் இல்லாமல், தண்ணீர் நிரம்பி, புதர் சூழ்ந்து காணப்படுகிறது.
ரோட்டில் செல்லும் வாகனங்கள், சிறிது திசை மாறினாலோ, கிணற்றுக்குள் விழுந்து பெரும் விபத்துஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அபாயத்தை, சுட்டிக் காட்டி, கடந்த 21ம் தேதி, “தினமலர்’ நாளிதழில், போட்டோ வெளியாகியிருந்தது.இது தொடர்பாக, மதுக்கரை பேரூராட்சி அதிகாரிகள், நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த தரைமட்ட கிணறு அமைந்துள்ள பகுதி, சரிவாக உள்ளதால், ஆபத்தான விபத்து பகுதியாக இருப்பதை, அதிகாரிகள் உறுதி செய்தனர்.கிணறு அமைந்துள்ள இடம், எல் அண்ட் டி டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிட்., நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு, மதுக்கரை பேரூராட்சி சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம் அனுப்பியுள்ள உத்தரவில், “கிணறு அமைந்துள்ள இடம், தங்களுக்கு சொந்தமான பகுதியாக இருப்பதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், தாங்களே அதற்கு முழு பொறுப்பு ஏற்க நேரிடும். சாலையோர கிணற்றை உடனே மூடி, விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க, உரிய ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.