தினமலர் 20.02.2010
ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : மதுரை குருவிக்காரன் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலுள்ள டாஸ்மாக் பார் அருகே ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கில், “”குருவிக்காரன் சாலை பாலம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு டாஸ்மாக் பார் செயல்படுகிறது. அதை அகற்ற உத்தரவிட வேண்டும்,” என கோரினார். வழக்கு நேற்று நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர், “”இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட போது, இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என, கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்,” என்றார்.
மேலும் பார் அருகே ரோட்டோர ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தி.மு.க., வட்ட செயலாளர் முத்து உட்பட 4 பேர் ஆக்கிரமிப்புகளை எடுப்பதாக அரசு வக்கீல் ஜானகிராமலு மூலம் தெரிவித்தனர். அதை பதிவு செய்த நீதிபதிகள்,””ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற,” முதற்கட்டமாக உத்தரவிட்டனர். மேல் விசாரணையை பிப்., 24க்கு தள்ளிவைத்தனர்.