தினத்தந்தி 18.11.2013
வடபழனி, சுதந்திர தின பூங்கா பகுதிகளில் மழைநீர் தேங்கிய
பகுதிகளில் மேயர் சைதை துரைசாமி ஆய்வு தண்ணீரை விரைந்து அகற்ற
அதிகாரிகளுக்கு உத்தரவு

வடபழனி, சுதந்திர தின பூங்கா பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை மேயர்
சைதை துரைசாமி நேற்று பார்வையிட்டார். தண்ணீரை விரைந்து அகற்ற
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேயர் சைதை துரைசாமி ஆய்வு
சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி இருந்த
மண்டலம் 10–க்குட்பட்ட ஆற்காடு சாலை, வடபழனி பேருந்து நிலையம், விஜயா
மருத்துவமனை பகுதி மற்றும் மண்டலம் 9–க்குட்பட்ட சுதந்திர தின பூங்கா
அருகில் உள்ள பள்ளி சாலை ஆகிய பகுதிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை
துரைசாமி, கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு
செய்தார்கள்.
அப்போது, மழையினால் சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீரை விரைந்து
அகற்றிடவும், மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் மழைநீர் வடிகால்வாய்கள்
முழுமையாக அமைக்கப்படவில்லை என்பதால் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும்
இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனுக்குடன் உறிஞ்சி வெளியேற்றிட
வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.
போர்க்கால நடவடிக்கை…
மழையினால் தண்ணீர் தேங்கும் இடங்களில் அதற்கான காரணங்களை அறிந்து அவற்றை
அகற்றிட வேண்டும் என்றும், அடுத்த மழை பெய்யும்போது தண்ணீர் தேங்காத
வண்ணம் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை
மேயர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி தெற்கு மண்டல இணை ஆணையர் ஆர்.ஆனந்தகுமார்,
துணை ஆணையர் த.ஆனந்த், மண்டலக்குழு தலைவர் எல்.ஐ.சி.மாணிக்கம் உள்பட
மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாநகராட்சி அறிக்கை
2011–ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும்
மழையினால் தண்ணீர் தேங்கும் இடங்களின் எண்ணிக்கை 291–ஆக இருந்ததாகவும்,
தற்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, சென்னை மாநகராட்சி
போர்க்கால நடவடிக்கைகள் காரணமாக 98 இடங்களில் மட்டுமே தண்ணீர்
தேங்கியுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.