தினமலர் 19.08.2010
வணிக நிறுவனங்களில்நகராட்சி அதிகாரி ஆய்வு
அரியலூர்: அரியலூர் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது, பிளாஸ்டிக் கப், பாலிதீன்பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கத்துடன் அவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும் என நகராட்சி மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு, அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் உத்தரவிட்டார்.இதையடுத்து அரியலூர் நகராட்சி நிர்வாக அலுவலர் சமயச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கணேசன், உணவு ஆய்வாளர் ரத்தினம், வட்டார மருத்துவ பணியாளர்கள் சுமித்சைமன், வகீல், ரெங்கநாதன், நமச்சிவாயம் உள்ளிட்டோர் அரியலூர்–செந்துறை சாலையில் இருசுகுட்டை பகுதியில் உள்ள மளிகைகடை பெட்டிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பிஸ்கட், கேக் உள்ளிட்டவற்றில் காலாவதியான பொருள் மற்றும் பிளாஸ்டிக் கப், பாலிதீன் பையை பறிமுதல் செய்தனர்.