தினகரன் 12.10.2010
வணிக நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்க குறைதீர் நாளில் மனு பார்க்கிங்’ வசதி கட்டாயம்திருச்சி, அக். 12: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய வணிக நிறுவனங்களில் கட்டாயம் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமையில் நேற்று நடந்தது. அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அளித்த மனுவில், பண்டிகை காலங்களில் ஒரு மாதம் என்எஸ்பி ரோடு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தரை கடை போட்டு வியாபாரம் செய்ய அனுமதிப்பது வழக்கம். இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு மிக குறைந்த நாட்களே உள்ளன. எனவே எங்களுக்கு இந்த ஆண்டு தரைக்கடை போட அனுமதி வழங்க வேண்டும். இதுபற்றி மாநகராட்சி, போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
மாமன்ற 4வது வார்டு கவுன்சிலர் விஜயலெட்சுமி (மதிமுக) அளித்த மனு:
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சவக்கிடங்கு இருந்தது. கட்டிடம் சேதமடைந்ததால் 2009 முதல் செயல்படவில்லை. இப்பகுதியில் தற்கொலை, விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் சிரமப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. மாணவர்களையும், பெற்றோரையும் வங்கி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். இப்பிரச்னை தீர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த மற் றொரு மனுவில் கூறியுள்ளார்.
அல்லூரை சேர்ந்த நவநீதன் என்பவர் அளித்த மனு: அல்லூர் கீழத்தெருவில் 10 ஆண்டுக்கும் மேலாக திறந்த வெளியில் ஊராட்சி குடிநீர் மோட்டார் ஸ்விட்ச் போர்டு உள்ளது. அங்கு அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் மின் மோட்டார் அறை கட்ட வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து.
மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருச்சி காந்தி மார்க்கெட் 1936ம் ஆண்டு திருச்சியின் மக்கள் தொகை அடிப்படையில் 7 ஏக்கர் பரப்பில் துவக்கப்பட்டது. ஆனால் மக்கள் தொகை அதிக ரித்துவிட்ட நிலையிலும் அதை விரிவுபடுத்தவில்லை. ஏற்கனவே நெரிசல் மிகுந்த மார்க்கெட்டில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிவதால்விபத்து ஏற்படுகிறது. எனவே மார்க்கெட்டிற்குள் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொசுமருந்து அடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனுமதி மறுக்கப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை மாநகருக்குள் அனுமதிக்க கூடாது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முக்கிய வணிக நிறுவனங்களில் கட்டாயம் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. டிஆர்ஓ ராமன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.
கோயில் இடம் ஆக்கிரமிக்க முயற்சி
திருச்சி டிவிஎஸ் டோல் கேட் உஸ்மான் அலி தெரு மக்கள் அளித்த மனுவில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள உஸ்மான் அலித்தெரு கடைசியில் பல லட்சம் செலவு செய்து ஸ்ரீசங்கிலிமுத்து மாரியம்மன் கோயிலை கட்டியுள்ளோம். 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திருமலை என்பவர் கோயிலுக்கு அருகேயுள்ள பாதையும், கோயிலின் 25 சதவீத நிலமும் தனக்கு சொந்தமானது எனக்கூறி பிரச்னை செய்கிறார். கலெக்டர் இப்பிரச்னையில் சுமூக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.