தினமலர் 30.11.2013
வணிக வளாகம் முன் குப்பைத்தொட்டி வைத்து வரி வசூல்: நகராட்சி நூதன நடவடிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இதில்,பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2,760 வணிக வளாகங்களிலிருந்து 18 லட்சம் ரூபாய் வசூலாகும்.
கடைகளுக்கு ஏற்றவாறு, குறைந்த பட்சம் 123 ரூபாய் முதல் 1,216 ரூபாய் வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வசூலிக்கப்படும். மற்ற வரியினங்கள் 100 சதவீதம் வரை வசூலாகும் நிலையில், தொழில் வரி மட்டும் ஆண்டுதோறும் 25 சதவீதம் மட்டுமே வசூலாகி வருகிறது.
ஒரு சிலர் பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால், இதுவரை 62 லட்சம் ரூபாய் வரை வணிக வளாகங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவையில் உள்ளன. நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் உத்தரவின் பேரில், நகராட்சி வருவாய் அதிகாரிகள் அதிரடியாக தொழில் வரி வசூலிக்க களம் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், கடைவீதியில் பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரிகள் வரி வசூலிக்க களம் இறங்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரி செலுத்துவதாக கடை உரிமையாளர்கள் உறுதியளித்ததால், அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்நிலையில், கோவை ரோட்டில், தனியார் வங்கியின் முன், குப்பைத்தொட்டிகள் வைத்து, அதிகாரிகள் வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் வரும் வழித்தடத்தில், இரண்டு குப்பைத்தொட்டிகள் திடீரென வைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கி அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால், குப்பைத்தொட்டிகளில், கிடக்கும் குப்பை குவியலால், துர்நாற்றம் வீசி வருவதால், வங்கி அதிகாரிகள், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
நகராட்சி தொழில் வரி வசூலிக்க பல நூதன முறைகளை பின்பற்றி வருவது கடை உரிமையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரி பாக்கி அதிகம்: நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,”கோவை ரோட்டில் உள்ள தனியார் வங்கி செயல்படும் கட்டடத்திற்கு உரிமையாளர் வரி செலுத்தவில்லை. 7 லட்சம் ரூபாய் வரி பாக்கியுள்ளது. மேல் கட்டடத்திற்கு அனுமதி பெறவில்லை. பலமுறை தெரிவித்தும் வரி செலுத்தவில்லை. எனவே, தான் அதிரடியாக வணிக வளாகம் முன் குப்பைத்தொட்டிகளை வைத்துள்ளோம்,’ என்றனர்.