தினகரன் 27.05.2010
வண்டிப்புறம்போக்கு நிலத்தை பேரூராட்சிக்கு ஒப்படைக்க கோரிக்கை
பொள்ளாச்சி, மே 27: பொள்ளாச்சி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. நேற்று ஆனைமலை உள்ளவட்டத்துக்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.
ஆர்.டி.ஓ. அன்பழகன் தலைமையில் நடைபெறும் ஜமாபந்திக்கு தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகிக்கிறார். இதில் நேற்று ஆனைமலை பேரூராட்சித் தலைவர் அசோக் சண்முக சுந்தரம் ஆர்.டி.ஓ. அன்பழகனிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில் கூறியுள்ளதாவது: ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட மாசாணியம்மன் கோயில் வீதியில் சுமார் அரை கி.மீ., தூரம் வண்டிப்பாதை புறம்போக்கு என்று ஆவணங்களில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வயல்களுக்கு செல்லும் வழித்தடமாக இருந்ததால் இதனை எவரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் தற்போது அப்பகுதியில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயில் பிரசித்தி பெறத் துவங்கியுள்ளதால் மேற்படி இடத்தில் சாக்கடை கட்டுவது, ரோடு சீரமைப்பது, தெருக்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து பராமரிப்பு பணிகளையும் பேரூராட்சி நிர்வாகமே நிதி ஒதுக்கி செய்து வருகிறது. சமீபத்தில் ரூ. 18 லட்சம் மதிப்பில் மேற்படி பகுதியில் புதிதாக தார் ரோடு போடும் பணியும் பேரூராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அந்த இடம் வண்டிப்பாதை புறம்போக்கு என்று உள்ளதால் சாக்கடை கட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. ஆகவே அந்த இடத்தை வண்டிப்பாதை புறம்போக்கு என்று இருப்பதை மாற்றி பேரூராட்சி வசம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது