தினமலர் 09.08.2010
வண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது பெற்று சாதனை
திருநெல்வேலி: நெல்லை கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் சிறந்த கிராம கல்விக்குழு ஆகிய இரு விருதுகளை பெற்று வண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளி சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையின் சார்பில், கல்விப்பணியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டு தோறும் கேடயம் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை கல்வி மாவட்டத்தில் 2009-10ம் கல்வியாண்டில் சிறப்பாக கல்வி திட்டங்களை செயல்படுத்தியதற்காக வண்ணார்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி “சிறந்த பள்ளி விருது‘க்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் கிராமக் கல்விக்குழுவோடு இணைந்து பள்ளியின் வளர்ச்சியை மேம்படுத்தியதற்காக 2009-10ம் கல்வியாண்டில் “சிறந்த கிராம கல்விக்குழு‘ விருதினையும் வண்ணார்பேட்டை மாநகராட்சி புதிய நடுநிலைப்பள்ளி பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் இப்பள்ளி சிறந்த பள்ளி விருது,சிறந்த கிராம கல்விக்குழு விருது ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் வழங்கும் விழா பள்ளியில் நடந்தது. விழாவிற்கு கவுன்சிலர் கந்தன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி வரவேற்றார். பாளை. உதவி தொடக்க கல்வி அலுவலர் மெட்டில்டா, இரண்டு விருதுகளையும் முன்னாள் தலைமையாசிரியர் சங்கரலிங்கத்திடம் வழங்கி பாராட்டினார். விழாவில், தலைமையாசிரியர்கள் ஜோசப், ராமசுப்பிரமணியன், வேணி, ஆசிரியை சுமதி, வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை ஹெலன் ஜாஸ்மின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் புஷ்பக்கனி, மாது புஷ்பம், அமைப்பாளர் பட்டம்மாள் ஆகியோர் செய்தனர்.