தினமலர் 17.06.2010
வரிகளை வசூலிக்க மாநகராட்சி புது முயற்சி
மதுரை: நிதி ஆண்டு துவக்கம் முதலே வரியை வசூலிக்க துவங்கி உள்ளதால், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் உயர்ந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வரி வசூல் முறையாக செய்யப்படவில்லை. விரிவாக்கப் பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. கட்டடங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையும் சரியாக வசூலிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆண்டு முடியும் போது மார்ச் மாதத்தில் தான், மாநகராட்சி அதிகாரிகள் வரி வசூலில் தீவிரம் காட்டுவர். இதனால் முழுமையான வரி வசூலில் அதிகாரிகள் ஈடுபட முடியவில்லை. இதனால், “வரி வசூல் என்றாலே நிதி ஆண்டு முடிவில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்று” என்ற கருத்து அலுவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவியது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, நிதி ஆண்டின் துவக்கம் முதல் வரி வசூலில் ஈடுபட மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இப்போதே வரி வசூலில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் பல லட்சம் ரூபாய் வரி வசூலாகிறது. சென்ற 11ம் தேதி மட்டும் ஒரே நாளில், சாதனை அளவாக 34 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூலாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் அலுவலர்களுக்கு வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வார இறுதியில் நடக்கும் மறு ஆய்வுக் கூட்டத்தில் இலக்கை அடைய முடிந்ததா என விவாதிக்கப்படுகிறது. துவக்கம் முதல் வரி வசூல் செய்வதால் நிதி ஆண்டு இறுதியில் வரி வசூல் எளிதாக இருக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர