தினமணி 27.08.2010
வரி உயர்வு அறிவிப்பின் அடிப்படையிலேயே வரி புதுகை நகராட்சி நிர்வாகம் விளக்கம்
புதுக்கோட்டை, ஆக. 26: புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கடந்த 2008-ல் உயர்த்தப்பட்ட வரிவிகிதத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“”நகராட்சியின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வின் மூலம் 1.4.2008 முதல் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 20 சதவீதமும் தொழில் கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 80 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து புதுக்கோட்டை வரி செலுத்துவோர் சங்கத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 28.7.2009-ல் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பெறப்பட்ட நிர்வாக அறிவுறுத்தல், உரிய அறிவிப்புகள், மறு சீராய்வுப் படிவங்கள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 1.4.2008 முதல் உயர்த்தப்பட்ட 80 சதவீத வரியைக் குறைக்க நகராட்சி சட்ட விதிகளில் இடமில்லை. எனவே, உயர்த்தப்பட்ட வரியை நகராட்சி நிர்வாகத்துக்கு நிலுவையின்றி செலுத்தி நகராட்சி நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.”