தினமணி 01.09.2009
வரி செலுத்தாதவர்களின் பெயர்கள் விரைவில் விளம்பரப்படுத்தப்படும்
திருவண்ணாமலை, ஆக. 31: திருவண்ணாமலை நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீர், வீட்டு வரி ஆகியவற்றை 15 நாள்களில் செலுத்தாதவர்களின் பெயர்கள் விளம்பரப்படுத்தப்படும் என நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் கூறினார்.
திருவண்ணாமலை நகரமன்றக் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
“நகரில் வரி வசூல் செய்யப்படுகிறதா? நகராட்சிக்கு எவ்வளவு வரி பாக்கி உள்ளது. வரி பாக்கி வைத்திருப்பவர்கள் பெயர் விளம்பரப்படுத்தப்படும் என கூறப்பட்டது. இதுவரை செய்யவில்லை’ என நகர்மன்ற உறுப்பினர் பரசுராமன் கேள்வி எழுப்பினார்.
“நகராட்சி ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டை பணி, குடும்ப அட்டை ஆய்வுப் பணி ஆகியவற்றுக்குச் சென்றதால் சரியாக வசூல் செய்யமுடியவில்லை. வரி பாக்கி கட்டாதவர்கள் விஜபிகளாக உள்ளதால் காலதாமதம் ஆகிறது. இன்னும் 15 நாளில் வரிகள் அனைத்தும் கட்ட வேண்டும். அப்படி கட்டாவிட்டால் அவர்களது விவரம் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்படும்’ என நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் பதிலளித்தார்.
“புதை சாக்கடைத் திட்டம் சரியாக நடைபெறவில்லை. ஊழல் நடக்கிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்’ என்றார் சுனில்குமார்.
“புதை சாக்கடைத் திட்டம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சில ஒப்பந்ததாரர்கள் குழி தோண்டி, குழாய் பதித்த பின், அதை சரியாக மூடாமல் செல்கின்றனர். நகராட்சியில் டெண்டர் விடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பணிகள் கூட நடைபெறவில்லை. இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் கூட்டம் நடத்தி உடன் நடவடிக்கை எடுக்கப்படும்’ என நகர்மன்றத் தலைவர் பதிலளித்தார்.
நகரில் உள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் தலா 10 சோடியம் விளக்கு வழங்க வேண்டும்‘ என தியாகராஜன் கூறினார்.
கூட்டத்தில் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் பேசினர்.
2.5 கோடி வரிபாக்கி
கூட்டத்துக்குப் பின்னர் இரா.ஸ்ரீதரன் நிருபர்களிடம் கூறியது:
நகராட்சியில் ரூ.1.5 கோடி வீட்டு வரி பாக்கியும், ரூ.1 கோடி குடிநீர் பாக்கியும் உள்ளது. மேலும் தமிழக அரசு வழங்கிய ரூ.52 லட்சத்தில் சுகாதாரம், மின்வசதி பொதுப் பிரச்னைக்குச் செலவிடப்படும்.
தற்போது நகராட்சியின் பல்வேறு பணிகள் காரணமாக 90 சதவீதம் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.