வரி செலுத்தாதோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்
அரக்கோணம் நகரில் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தவறினால் அவர்களது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரக்கோணம் நகரில் வரி இனங்களால் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
எனவே, உரிய காலக்கெடுவுக்குள் வரி வசூல் செய்ய குழு வசூல் பணி மூலம் தீவிரப்படுத்தப்படவுள்ளது.
அதிக நிலுவைத் தொகை வைத்துள்ள வரி விதிப்புதாரர்களை நேரில் அணுகுதல், அறிவிப்புகள் செய்தல், ஜப்தி நோட்டீஸ் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
மேலும், அதிகமாக வரி பாக்கி வைத்துள்ளோரின் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம்.
நகரில் சாலைகள், விளக்குகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை முழு அளவில் செயல்படுத்திட நிதிஆதாரம் அவசியமாகிறது.
எனவே, வரி மற்றும் வரியில்லா இன நிலுவைகளை அனைவரும் உடனடியாகச் செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என செந்தில்முருகன் கூறியுள்ளார்.