தினமலர் 20.02.2010
வரி செலுத்தாத வீடுகளில் ஜப்தி : கம்பம் நகராட்சியினர் அதிரடி
கம்பம் : குடிநீர் கட்டணம், சொத்துவரி, வீட்டு வரி, தொழில்வரி உள்ளிட்ட பலவகை வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்தாதவர்களின் வீடுகளில் ஜப்தி நடவடிக்கை எடுக்க கம்பம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நகராட்சிகளில் பொதுச்சுகாதாரம், குடிநீர், தெருவிளக்குகள் பராமரிப்பு போன்ற பணிகளுக்கும், நகரில் மேற் கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கும், பணியாளர்களின் சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்கும், வரி வருவாயை நம்பியே, அந்நிர்வாகங்கள் உள்ளன. குடிநீருக்கு குடிநீர்வாரியத்திற்கும், மின்சாரத்திற்கும் மின்வாரியத்திற்கும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் நகராட்சியினர் கட்டணம் செலுத்தி வருகின்றனர். குடிநீர் வடிகால் வாரியத்திடமிருந்து குடிநீர் அதிக விலைக்கு வாங்கி, குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சப்ளை செய்கிறது.
இந்நிலையில் குடிநீர், சொத்து, தொழில், வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை செலுத்துவதில் பெரும்பாலானோர் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கம்பம் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் வரிவசூலை தீவிரப்படுத்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கம்பம் நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”” இதுவரை குடிநீர் கட்டணம் , சொத்துவரி, வீட்டு வரி மற்றும் தொழில்வரி கட்டாமல் நிலுவை வைத்திருப்பவர்கள், உடனடியாக நிலுவைத் தொகையை நகராட்சியில் செலுத்த வேண் டும். தவறும் பட் சத்தில், வரி நிலுவை வைத்திருப்பவர்களின் வீடுகளில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அந்த வீடுகளுக்கு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்படமாட்டாது. தேவையற்ற நடவடிக்கையை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.