வரி நிலுவைக்காக அரசு கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
குன்னூர்:குன்னூர் நகராட்சி சார்பில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், நகராட்சி கடைகளுக்கான வாடகை உள்ளிட்டவற்றை ஊழியர்கள் தீவிரமாக வசூலித்து வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் நகர் பகுதியில் அனைத்து வரிகளுக்குண்டான தொகையை வசூலிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் வரி செலுத்தாத குடியிருப்புகள், ஓட்டல்களில் குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர். ஏற்கனவே சுகாதார துறை மற்றம் வனத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகம், பழம் பதினிடும் நிலையம் ஆகியவற்றில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நகராட்சிக்கு ரூ.40 ஆயிரம் வரி செலுத்த வலியுறுத்தியும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சண்முகம் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான ஊழியர்கள் சீல் வைத்தனர். இந்நடவடிக்கை மேலும் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தனியார் கட்டிடங்கள் போல் அரசு அலுவலகங்களுக்கும் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.