தினமணி 01.04.2010
வரி வசூலிக்காததால் வருவாய் இழப்பு
வேலூர், மார்ச் 31: புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்காமலும், வசூலிக்காமலும் இருப்பதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சியின் சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேயர் ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை மேயர் தி.அ.முகமது சாதிக், பொறியாளர் தேவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
உறுப்பினர் ஜி.ஜி.ரவி: சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்ட சிஎம்சி மருத்துவமனை, கடந்த 25 ஆண்டுகளாக வணிக நோக்குடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலிக்காமல் உள்ளது. சிஎம்சி நிர்வாகம் இலவசமாக ஒரு தண்ணீர் லாரி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது. அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய லட்சக்கணக்கான வரித் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் ப.கார்த்திகேயன்: சிஎம்சி மருத்துவமனை வேலூர் நகருக்கு பெருமை. அங்கு ஏராளமான மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளதால் அவர்களுக்கு ஊதியம் வழங்க சிகிச்சை பெறுவோரிடம் கட்டணம் வசூலித்தே ஆக வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் ஏழை மக்களுக்கு இலவசமாக சேவை செய்கின்றனர். வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர் சீனிவாசகாந்தி: வேலூரில் நடைபெற்று வரும் புதைசாக்கடைத் திட்டம் குறித்து யாரிடம் கேட்பது, தெரிவிப்பது போன்ற விவரங்கள் இல்லை. மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதைசாக்கடைத் திட்ட அதிகாரிகளுடனான கூட்டம் நடத்த வேண்டும். பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும். துப்புரவு பணிகளை மேற்கொள்ள வாகனங்கள் அனுப்பப்படுவதில்லை.
நீதி (எ) அருணாசலம்: வேலூரில் ஏராளமான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன இவற்றுக்கு வரி விதிக்கப்படாமல் உள்ளதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிஎம்சி அனெக்ஸ் கட்டடத்துக்கு வரி விதிக்கப்படாமல் உள்ளது.
பொறியாளர் தேவகுமார்: புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயபிரகாஷ்: வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போலியான திண்பண்டங்கள் விற்கப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர்: அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்