தினமலர் 23.02.2010
வரைபட அனுமதி இல்லாமல் வீடுகள்: மடத்துக்குளம் பேரூராட்சியில் அதிகரிப்பு
மடத்துக்குளம் : வரைபட அனுமதி இல்லாமல் இஷ்டம் போல் வீடுகள் கட்டப்படுவதால் மடத்துக்குளம் பேரூராட்சி பகுதியில் அதிகளவில் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.காலி இடங்களில் வீடுகள் கட்ட வேண்டுமானால் கட்டப்படும் கட்டடம் குறித்த வரைபடம் சம்பந்தப்பட்ட ஊராட்சிஅல்லது பேரூராட்சிகளில் வழங்கி முறையாக அனுமதி பெற்று கட்டப்பட வேண்டும்.
வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள சதுர அடியை வைத்து வீடு, கடைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்படும்.இது பொதுவான நடைமுறையாகும்.ஆனால், மடத்துக்குளம் பேரூராட்சியின் பல்வேறு இடங்களில் தற்போது கட்டப்படும் கட்டடங்களுக்கு வரைபட அனுமதி வாங்குவது இல்லை. முன் கட்டிய பழைய வீடுகளின் வரைபட அனுமதியை வைத்துக்கொண்டு புதிய கட்டடங் கள் கட்டப்பட்டு வருகிறது. அல்லது வரைபடத்தில் சதுர அடிகளை குறைவாக குறிப்பிட்டு அனுமதி பெறப்பட்டு வருகிறது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் நேரில் ஆய்வு செய்வது இல்லை. இதனால் பேரூராட்சியினருக்கு ஆண்டு தோறும் பல லட்ச ரூபாய்கள் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. செயல்அலுவலர் திருமலைசாமி கூறியதாவது: இதற்கு முன் வரைபட அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை,தற்போது முறையாக ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது,பேரூராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது,முறைகேடாக கட்டடம் கட்டுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ‘என்றார.