தி இந்து 31.03.2017
வறட்சி காலங்களில் சென்னையின் தாகம் தீர்க்க
கடல்நீர் மூலம் கிடைக்கும் குடிநீரே கைகொடுக்கும்: பொதுப்பணித் துறை
மூத்த அதிகாரிகள், நிபுணர்கள் கருத்து

சென்னை மீஞ்சூரில் செயல்படுத்தப்படும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். (கோப்புப் படம்)
தமிழகத்தில் 1993-ம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டபோது காவிரி, பாலாறு,
கிருஷ்ணா நதிநீர்தான் சென்னை மக்களின் தாகம் தீர்த்தது. அதுபோல இந்த ஆண்டு
கடல்நீரில் இருந்து கிடைக்கும் குடிநீர் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறது.
எதிர்காலத்திலும் கடல்நீரில் இருந்து கிடைக்கும் குடிநீர் சென்னை மக்கள்
குடிநீர் தேவையில் பெரும் பகுதியைப் பூர்த்தி செய்யும் என்று நிபுணர்கள்
கூறுகின்றனர்.
1993-ம் ஆண்டு தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத
அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
அதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நீராதாரங் கள் மூலம் சென்னைக்கு
தண்ணீர் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கடல் நீரைக்
குடிநீராக்கும் திட்டங்கள் இல்லை. கிருஷ்ணா நதிநீரும் வரவில்லை.
அதனால் ஈரோடு, நெய்வேலி யில் இருந்து ரயிலில் காவிரி நீர் எடுத்து
வரப்பட்டது. தினமும் 2 ரேக்குகளில் (சுமார் 80 டேங்கர் கள்) தண்ணீர்
வந்தது. அதுபோல விஜயவாடாவில் இருந்து தனி ரயிலில் கிருஷ்ணா நதிநீர் கொண்டு
வரப்பட்டது. பழைய மாமல்ல புரம் சாலையில் உள்ள ஒக்கியம் துரைப்பாக்கம் ஏரி
நீர் சுத்திகரிக் கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஓச்சூர் என்ற இடத்தில்
பாலாறு நிலத்தடி நீர் லாரிகளில் எடுத்து வரப்பட்டது.
தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் என்பதால்
முதன்முறையாக சென்னையில் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்வது
நிறுத்தப்பட்டது. அதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சென்னை முழுவதும்
லாரிகள் மூலம் வீடு, வீடாக 2 குடங்கள் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலை மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை நீடித்தது.
பின்னர் பருவமழை பெய்து ஏரிகளுக்கு நீர் வந்த பிறகே, குடிநீர் குழாய்கள்
சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
1993-ம் ஆண்டுபோல இந்த ஆண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும்,
கடல்நீரில் இருந்து கிடைக்கும் குடிநீர் நிலைமை ஓரளவுக்கு சமாளிக்க
உதவுகிறது.
இது தொடர்பாக பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
தற்போதைய நிலையை கருத் தில் கொண்டால், எதிர்காலத்தில் கடல்நீரில் இருந்து
கிடைக்கும் குடிநீரைத்தான் சென்னை மக்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை
ஏற்படும் என்றனர்.
அண்டை மாநிலங்களிலும் வறட்சி நிலவுவதால் காவிரி நீர், கிருஷ்ணா நீர்
கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின்
போட்டியால் சென்னைக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீர் அளவு முழுமையாக
கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நெய்வேலி மற்றும் திருவள்ளூர் மாவட்ட
பகுதிகளில் இருந்து தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுப்பதை
விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். பாலாறும் வறண்டு போய்விட்டது.
இப்படி பல வழிகளிலும் பிரச் சினை இருப்பதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும்
ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், புதிதாக கட்டப்படும் தேர்வாய்
கண்டிகை ஏரியையும் விரைவில் கட்டி முடிக்க வேண்டும். கடல்நீரைக்
குடிநீராக்கும் திட்டத் துக்கு ஏராளமாக செலவிட வேண்டி யிருப்பதால் பாலாறு,
காவிரி ஆறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உபரிநீரைச் சேமித்து வைக்க
தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மக்களின் தினசரி குடிநீர் தேவை 85 கோடி லிட்டர். தற்போது 55 கோடி
லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில், கடல்நீரில் இருந்து
எடுக்கப்படும் குடிநீரின் அளவு மட்டும் 20 கோடி லிட்டர் ஆகும். இதுதவிர
நெய்வேலியில் இருந்து 2 கோடி லிட்டரும், விவசாயக் கிணறுகளில் இருந்து 4
முதல் 6 கோடி லிட்டரும் பெறப்படுகிறது. மீதமுள்ள குடிநீர் சென்னைக்கு
குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து பூண்டி வந்து சேரும் கிருஷ்ணா நீர் அங் கிருந்து புழல்
ஏரிக்கு அனுப்பப் பட்டு சென்னைக்கு விநியோகிக் கப்படுகிறது. தற்போது பூண்டி
ஏரியில் இருந்து விநாடிக்கு 410 கன அடியும், புழல் ஏரியில் இருந்து
விநாடிக்கு 75 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 74 கன அடியும்
தண்ணீர் எடுக்கப்படுகிறது.
“சென்னையின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு தினசரி 10 கோடி லிட்டர்
உற்பத்தித் திறன் கொண்ட மற்றொரு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்
ஓராண் டுக்குள் தொடங்கப்படும். மேலும், தினசரி 40 கோடி லிட்டர் உற்பத்தித்
திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் மெகா திட்டம் இரு ஆண்டுகளில்
தொடங்கப்படும். இந்த இரு திட்டங்களும் செயல் படுத்தப்படும்போது சென்னை
மக்களின் குடிநீர் தேவையில் பெரும் பகுதி கடல்நீரில் இருந்து கிடைக்கும்
குடிநீர் மூலம் பூர்த்தி செய்யப்படும்” என்று சென்னைக் குடிநீர் வாரிய உயர்
அதிகாரி ஒருவர் கூறினார்.
வீணாக கடலில் கசியும் நீர்
எதிர்காலத்தில் தமிழகத்தில் 1993-ம் ஆண்டுபோல கடும் வறட்சி ஏற்பட்டால்
நிலைமையை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்று உலக வங்கி உதவியை தமிழக அரசு
நாடியது. அதையடுத்து ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம்
வந்த வெளிநாட்டு நிபுணர்கள் பாலாறு கடலில் கலக்கும் இடமான
சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பாலாறு நிலத்தடி நீர் கசிந்து வீணாக கடலுக்கு போய்க்
கொண்டிருப்பதை கண்டறிந்தனர். எனவே, சதுரங்கப்பட்டினத்தில் பாலாறு
படுகைக்கு கீழே 50 அடி ஆழம் தோண்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி
நீரைச் சேமித்து வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிக்கை அளித்தனர். இது
நடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தடுப்பணை கட்டுவதற்கான முயற்சி
நடைபெற்றதாக தெரியவில்லை.