தினமலர் 24.12.2009
வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களை உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபடணும் : அதிகாரிகளுக்கு வளர்ச்சி ஆணையர் ‘அட்வைஸ்‘
அரியலூர் : அரியலூர் தாசில்தார் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் முன்னிலையில், கூடுதல் தலைமைச் செயலாளரும், வளர்ச்சி ஆணையருமான செல்லமுத்து தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள், வேளாண் துறை, வேளாண் பொறியியல், பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறை என பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வளர்ச்சி ஆணையர் செல்லமுத்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ பல்வேறு ஆக்கப் பணிகளை முதல்வர் செய்து வருகிறார். அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான வசதிகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் முழு கவனம் செலுத்தி வருகிறார். அரியலூர் மாவட்டத்திற்கு தேவையான வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து எது வேண்டுமோ அதை செய்ய தயாராக உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களை, குறுகிய காலத்தில் அவர்களின் வருமானத்தை பெருக்கி, அவர்களையும் உயர் நிலைக்கு கொண்டு வர அவர்களுக்கான தேவையானவைகளை செய்ய வேண்டியது அலுவலர்களின் கடமையாகும். மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனை போன்று ஏனைய துறைகளும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன.
அலுவலகத்திற்கு தேவையான பணியாளர்கள் குறையிருப்பின் விரைவாக நிவர்த்தி செய்யப்படும். மாவட்டத்தில் இயற்கை வளம், மனித வளம் ஆகியவற்றினை கொண்டு அரியலூர் மாவட்டத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் டிஆர்ஓ பிச்சை, திட்ட அலுவலர் வெங்கடாசலம், இணை இயக்குநர்(வேளாண்) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) சடையப்ப விநாயகமூர்த்தி, உதவி இயக்குநர் (காதி) ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் வசந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் நாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.