தினமலர் 09.06.2010
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலை
ஈரோடு: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு “எல் அண்ட் டி‘ நிறுவனத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. டவுன் பஞ்சாயத்து பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் வேலைவாய்ப்பற்றோருக்கு, சென்னை “எல் அண்ட் டி‘ நிறுவனம் மூலம் கட்டுமான பிரிவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சாரம் அமைத்தல், ஷட்டரிங் கம்பி வளைத்தல், கொத்தனார் பயிற்சி அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ., பயின்றவர்களுக்கு மின்னியல் பணியாளர் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி மற்றும் தங்குமிடம் இலவசம். பயிற்சி காலத்தில் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இலவச காலணி வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் “எல் அண்ட் டி‘ நிறுவனம் தனது கட்டுமானம் நடக்கும் இடங்களில் சப் கான்ட்ராக்டருக்கு கீழ், திறனுக்கு ஏற்ப 5,000 ரூபாய் வரை வேலைவாய்ப்பு வழங்கும். பயிற்சியில் சேர விரும்புவோர், டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலை சரி பார்த்து, செயல் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெக்டர் சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.