தினமணி 12.09.2009
வளர்ச்சிப் பணிகள்: நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
திருச்சி, செப். 11: திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் டாக்டர் பி. செந்தில்குமார் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்னூர் அண்ணா நகர் –லாசன்ஸ் சாலையை இணைக்கும் ரூ. 4.70 கோடியில் பாலத்துடன் கூடிய இணைப்புச் சாலை அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை ஜெர்மன் வங்கி கடனுதவியுடன் ரூ. 24.30 கோடியில் மேம்படுத்தும் பணி, ரூ. 1.80 கோடியில் முடிந்துள்ள தில்லைநகர் பிரதான சாலையை மேம்படுத்தும் பணி, ரூ. 74 லட்சத்தில் முடிந்துள்ள நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றை டாக்டர் பி. செந்தில்குமார் பார்வையிட்டார்.
மேலும், ரூ. 169 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர்த் திட்டப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். நடைபெற்று வரும் பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அரியமங்கலம் ஜி கார்னரில் ரூ. 82 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன இறைச்சிக் கூடத்தையும், ரூ. 19.96 கோடியில் 34 வீடுகள் கட்டும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கருமண்டபத்தில் ரூ. 1.17 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை, பஞ்சப்பூரிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தையும் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, நகராட்சி நிர்வாக இயக்குநரக தலைமைப் பொறியாளர் ஆர். ரகுநாதன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவைக் கழக துணைத் தலைவர் டி. ராஜேந்திரன், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நிர்வாகப் பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.