தினமலர் 26.07.2010
வளர்ச்சி பணிக்கு ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பொது நிதியில் இருந்து வளர்ச்சி பணிகளுக்காக ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம்,நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் மணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், புதிதாக ரோடு போடுதல், வடிகால் வசதி, கழிப்பிடம் கட்டுதல், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு மற்றும் பகிர்மானம் செய்தல், குடிநீர் கசிவுகளை சரி செய்தல், ஆழ்கிணறுகளுக்கு புதிய மோட்டார் உள்ளிட்ட பணிகளுக்காக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.தார் தளம் அமைக்க 20 லட்சம் ரூபாய்; மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட எட்டு லட்சம் ரூபாய்; மழைநீர் வடிகால் கட்ட 9.5 லட்சம்; வேலம்பாளையம் மயானம் அருகே பொதுக்கழிப்பிடம் கட்ட 10 லட்சம்; அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய் கசிவுகளை சரி செய்ய 14 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி கட்டடம் முன்பாக, மழைநீர் கூண்டு மற்றும் முகப்பு வேலைகளுக்கு 4.75 லட்சம்; நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட 10 லட்சம்; நகர்மன்ற கூட்ட அறைக்கு உட்புற வசதி செய்ய நான்கு லட்சம். முன்புறம் மற்றும் மேல்புறம் மலர்ச்செடிகள் அமைக்க 36 ஆயிரம்; புதிய பெயர் பலகைக்கு 40 ஆயிரம்; மின் இணைப்பு வழங்க ஒரு லட்சம் என, புது நகராட்சி கட்டடத்துக்கு 43.51 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.