தினமலர் 23.07.2010
வளர்ச்சி பணி ஆய்வு கூட்டம்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியம், நகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு, ஆவின் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.ஊரக வளர்ச்சித்துறை ஆய்வில், இலவச கான்கிரீட் வீடு திட்டம், வார்டு பிரிப்பு, மாநகராட்சி எல்லை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் குடிநீர் தொட்டி மற்றும் அலுவலக கட்டட பணி குறித்தும் கேட்டறியப்பட்டது.கால்நடை பராமரிப்பு, ஆவின் மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள், உத்தேசித்துள்ள புதிய திட்டங்கள் குறித்து அந்தந்த துறைவாரியான அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் துறைவாரியான உயரதிகாரிகள் பங்கேற்றனர்.