தினமணி 04.05.2010
வள்ளியூரில் திருவள்ளுவர் கலையரங்கம்
வள்ளியூர், மே 3: வள்ளியூர் பேரூராட்சியில் ரூ.12.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கலையரங்கு கட்டடத்தை வசந்தகுமார் எம்.எல்.ஏ திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
வள்ளியூர் பேரூராட்சியில் நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.20 லட்சமும், பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.12.20 லட்சம் செலவில் திருவள்ளுவர் கலையரங்கம் கட்டப்பட்டது. இக் கலையரங்கு திறப்புவிழா பேரூராட்சித் தலைவர் இரா.சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது.
கலையரங்கை திறந்துவைத்து வசந்தகுமார் எம்.எல்.ஏ பேசியது:
இந்த கலையரங்கு பாரம்பரியம் மிக்கதாகும். இதில், தியாக செம்மல்கள் பலர் பேசியுள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க கலையரங்கை முற்றிலுமாக திருத்தி புதிப்பித்திருக்கிறோம். இத் தொகுதியில் இதுவரையிலும் எந்த கட்சியினரும் செய்திராத வகையில் மக்கள் பணிகள் நடைபெற்றுவருகிறது. இன்னும் அதிகமான பணிகளை செய்ய காத்திருக்கிறேன் என்றார்.
பேரூராட்சி துணைத் தலைவர் இரா. ஆறுமுகநயினார் முன்னிலை வகித்தார். வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சந்திரசேகரன், நகரத் தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.