தினமலர் 04.08.2010
வாடகை செலுத்தாத கடைகளின் குத்தகை உரிமம் ரத்து!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாதவர்களின் குத்தகையை ரத்து செய்ய, நகராட்சி முடிவு செய்துள்ளது.காஞ்சிபுரம் நகரில் பஸ் நிலையம், மார்க்கெட் உட்பட, பல்வேறு பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இக்கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடையை ஏலம் எடுத்தவர்கள், பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். பெரும்பாலானோர், லட்சக்கணக்கான ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.பார்த்தசாரதி என்பவர், நான்கு லட்சத்து 72 ஆயிரத்து 251 ரூபாய் பாக்கி வைத்துள்ளார். சங்கர், மூன்று லட்சத்து 29 ஆயிரத்து 342 ரூபாய், ஜெய்சங்கர், மூன்று லட்சத்து 28 ஆயிரத்து 452 ரூபாய், பஞ்சாட்சரம், மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 25 ரூபாய், பாரதி என்பவர், இரண்டு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.நகரில், 48 கடைகளிலிருந்து 48 லட்சத்து 34 ஆயிரத்து 181 ரூபாய் வாடகை பாக்கி வர வேண்டியுள்ளது. வாடகை முறையாக வசூலிக்கப்படாததால் நகராட்சிககு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதை சரி கட்ட, இரண்டு மாதங்களுக்கு மேல் கடை வாடகை செலுத்தாதவர்களின் குத்தகை உரிமையை ரத்து செய்ய, மன்றத்தின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிர்வாக இயக்குனர், நகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத 48 கடைகளின் வாடகை பாக்கி விவரம் சமீபத்தில் நடந்த நகரமன்றக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.”வாடகை செலுத்தாத கடை குத்தகைதாரர்களின் உரிமத்தை ரத்து செய்வது, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மறு ஏலம் விட ஒப்பந்தப்புள்ளி கோருவது, இதனால் ஏற்படும் இழப்பீட்டிற்கும், வாடகை பாக்கி வைத்திருப்பவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கவும் கோர்ட்டில் வழக்கு தொடர்வது‘ என, தீர்மானிக்கப்பட்டது.மேலும், நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு இல்லாமல் வீதியில் வாழ்பவர்களை இரவில் கணக்கெடுத்து, அவர்களுக்கு நகராட்சி சார்பில் உறைவிடம் ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர், தங்குமிடம், கழிவறை, குளியல் அறை, மின் விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை செய்ய, 27 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.நகராட்சி பொது நிதியில் பணியை நிறைவேற்றிவிட்டு திட்டப்பணிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அதை ஈடு செய்து கொள்ள நகராட்சி முடிவு செய்துள்ளது.