வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை: செங்கம் பேரூராட்சி முடிவு
செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாத கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் சென்னம்மாள் முருகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில், செங்கம் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடை உரிமையாளர்கள், மார்ச் 31-க்குள் வாடகையை செலுத்திவிட வேண்டும். தவறினால் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பழைய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் சோடியம் விளக்கு அமைத்தல், குடிநீர் வசதி செய்தல், கட்டண கழிப்பிடம் பழுது பார்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
செங்கம் பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர்கள் பணி இடத்தை நிரப்புவது, பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டடத்தை சீரமைப்பது, புதிய குடிநீர் குழாய் அமைத்தல், தார் சாலை போடுதல், மயானப் பாதை சீரமைத்தல் போன்ற பணிகளை செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.