தினமணி 05.02.2010
வாடகை பாக்கி: பல்லடம் நகராட்சி எச்சரிக்கை
பல்லடம், பிப். 4: கடைகளை ஏலம் எடுத்தவர்கள் வாடகை பாக்கி இன்றி செலுத்த வேண்டும். தவறினால் கடை பூட்டி சீல் வைக்கப்படும் என்று பல்லடம் நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்லடம் நகராட்சிக்கு கடைவீதி, பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் நகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது. தற்போது வரை ரூ.64 லட்சம் வசூலாகியுள்ளது. ரூ.50 லட்சம் நிலுவையில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் வாடகையை பாக்கி இன்றி செலுத்த வேண்டும். தவறினால் அக்கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு பல்லடம் நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.