தினமலர் 02.03.2010
வாணியம்பாடி நகராட்சி அதிரடி திருமண மண்டபத்துக்கு சீல்
வாணியம்பாடி:வாணியம்பாடி நகராட்சி திருமண மண்டபம் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காததால் அதிகாரிகள் நேற்று போலீசார் உதவியுடன் திருமண மண்டபத்தை நகராட்சி வசம் கொண்டுவந்தனர்.
வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகில் சி.என்.ஏ., சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனை கடந்த 2004ம் ஆண்டு நகராட்சி சார்பில் முறைப்படி குத்ததைக்கு விடுவதற்காக டெண்டர் வைக்கப்பட்டது. இதில் தில்ஷாத்பேகம் என்ற பெயரில் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த குத்தகை காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
நகராட்சி அலுவலகத்திற்கு தற்போது இடம் தேவைப்படுவதால் மீண்டும் டெண்டர் விடப்படவில்லை. குத்தகைதாரரும் காலி செய்யாமல் இளைஞர் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்த 6 நாட்களுக்கு வாடகைக்கு விட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஜினியர் இளஞ்செழியன் தலைமையில் மேலாளர் சுந்தரேசன், நகராட்சி ஆர்.ஐ., பழனி, துப்புரவு ஆய்வாளர் ராஜேந்தின் மற்றும் அலுவலர்கள் திருமண மண்டபத்தை நகராட்சி வசம் (சுவாதீனம்) எடுக்க வந்தனர். அப்போது அங்கு இளைஞர் காங்., கூட்டம் நடத்துவதற்காக வந்திருந்த முன்னாள் எம்.பி., ஜெயமோகன் மற்றும் கட்சி பிரமுகர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் வெங்கடேசன் என்ற பெயரில் 6 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருப்பதாக ரசீதை காண்பித்தனர். இதனையடுத்து, நகராட்சி வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டவுடன் ரசீது போட்டு வாடகைக்கு விடப்படும் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர், வருவாய் ஆய்வாளர் கிருபானந்தம், வி.ஏ.ஓ., குணசீலன் ஆகியோர் முன்னிலையில் திருமண மண்டபத்தை நகராட்சி வசம் கொண்டு வந்தனர். மேலும் மண்டபத்தின் அலுவலக அறைக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. டவுன் சப்–இன்ஸ்பெக்டர் அன்பரசி, ஏட்டு கோபி மற் றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.