வாரத்துக்கு ஒரு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றத் திட்டம்
பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கு காரணமாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1. மாவட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் அண்மையில் நடந்தது.
2. எஸ்.பி. ராதிகா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் பொன்செல்வன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
3. கூட்டத்தில், மாவட்டத்தின் பிரதான நகர்களில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் கூறினார்.
4. அப்போது, போலீஸ் தரப்பில் நகரப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் பெருகியுள்ள ஆக்கிரமிப்பு காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதாக கூறினர்.
5. அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை, வருவாய் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் அகற்ற உத்தரவிட்டார்.
6. முதல் கட்டமாக கடலூர் நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதைத் தொடர்ந்து பிற நகரங்களில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
7. அதன்படி கோட்டாட்சியர் ரா.லலிதா தலைமையில் நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி கடலூர் நகரின் பிரதான சாலைகளை ஆய்வு செய்தனர். ÷அதில், முதல் கட்டமாக வரும் 13-ம் தேதி கடலூர் – திருவந்திபுரம் சாலை மற்றும் வண்டிப்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளனர்.
8. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரம் ஒரு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதேப்போன்று மாவட்டத்தின் பிற நகரங்களிலும் அந்தந்தப் பகுதி வருவாய், நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அல்லது பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.