தினமலர் 12.02.2010
வாலாஜாவில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்
வாலாஜாபேட்டை : வாலாஜாபேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மீண்டும் நேற்று தொடங்கினர்.
வாலாஜாபேட்டை நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் பல ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த மாதம் 21ம் தேதி நகராட்சி, போலீஸ், வருவாய்த்துறை உதவியுடன் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். இதைத்தொடர்ந்து, போலீஸ் அமைத்த நகர நலக்குழுவின் மூலம் நடைபாதைகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் பொருட்டு “பேரிகாட்‘ அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநில தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான
அணைக்கட்டு ரோடில் பல ஆண்டுகளாக அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்து வருவதாகவும், விபத்துகள் அப்பகுதியில் ஏற்பட்டு உயிர்சேதம் நடப்பதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில் அப்பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள், வீடுகள் ஆகிய பகுதியில் ஆக்கிரமித்து கட்டியுள்ள சுற்றுச்சுவர் மற்றும் மேல்சுவர் பகுதிகளை புல்டோசர் மூலம் அதிரடியாய் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
இதனால் குறுகலாக காட்சி அளித்த அந்த சாலை இப்போது விசாலமாக தெரிகிறது. மேலும் காணாமல் மறைந்து கிடந்த கழிவுநீர் கால்வாயும் இப்போது வெ ளியில் தலைகாட்டியுள்ளது. இதன் காரணமாக சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் உட்பட பல கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இப்போது சிரமமின்றி செல்லலாம். இப்பகுதியில், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.