தினகரன் 26.08.2010
விசா வாங்க வருபவர்களுக்காக அமெரிக்க தூதரகம் அருகில் நிழற்குடை இவ்வாறு மேயர் தெரிவித்தார்.
சென்னை, ஆக.26: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வருபவர்கள் அமருவதற்காக நிழற்குடை அமைப்பது குறித்து தூதரக அதிகாரிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் அமெரிக்க துணைத்தூதரகம் உள்ள அண்ணாசாலை மேம்பாலம் அருகில் நடைபாதையில் நிழற்குடை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தூதரக அலுவலகத்திற்கு மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி ஆகியோர் நேற்று நேரில் சென்றனர். அங்கு துணைத் தூதர் ஆன்ட்ரூ டி.சிம்கின், தூதரக அதிகாரி ப்ரையன் டால்டன் மற்றும் அரசியல் பொருளாதார பிரிவை சேர்ந்த பின்னி ஜேக்கப் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் தூதரக வளாகத்தையொட்டியுள்ள நடைபாதைக்கு வந்து நிழற்குடையை எந்த இடத்தில் அமைக்கலாம் என ஆய்வு செய்தனர்.
பின்னர் மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலத்தில் உள்ளவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் அதற்கான விசாவை இங்குள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வந்து பெறவேண்டும். இப்படி வருபவர்கள் வெயில், மழையில் பாதிக்கப்படாமல் அமருவதற்காக நடைபாதையை அகலப்படுத்தி, தடுப்பு வேலி அமைத்து நிழற்கூரை அமைத்திட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி அவர்களிடம் ஆலோசனை நடத்தினோம். இந்த பணியை மாநகராட்சியுடன் தூதரகமும் இணைந்து நிறைவேற்றும். நிழற்கூரை வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.