தினமணி 23.07.2010
விஞ்ஞான முறையில் குப்பைகள் அகற்றம்: மாநகராட்சி கூட்டத்தில் விளக்கம்
திருப்பூர், ஜூலை 22: விஞ்ஞான முறையில் குப்பையில் இருந்து மின்சாரம், உரம், மணல் தயாரிப்பு, மற்றும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பன்முகப் பயன்பாடுகள் கொண்ட திட்டம் குறித்து வியாழக்கிமை நடந்த திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் விளக்கப்பட்டது.
÷மும்பை, சூரத் உள்ளிட்ட நகரங்களில் இத் திட்டத்தை செயல்படுத்தியுள்ள ஹேன்ஜெர் என்ற நிறுவனம், திருப்பூரிலும் அத்திட்டத்தை செயல்படுத்த முதல் கட்ட ஆலோசனைகளை தெரிவித்துள்ளது.
÷திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் இருந்தும் நாளொன்றுக்கு சுமார் 450 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதில், 20 டன் குப்பைகளை மட்டும் உரமாக்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கோயில்வழி பகுதியில் செயல் படுத்தி வருகிறது. மீதமுள்ள குப்பை மாநகரைச் சுற்றிய பாறைக்குழிகளில் கொட்டி அழிக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
÷2011ம் ஆண்டு முதல் திருப்பூர் மாநகராட்சியுடன் 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகளும் 8 ஊராட்சிகளும் இணைய உள்ளதால் அப்போது தினமும் 765 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதிகரிக்கவுள்ள குப்பைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திடக்கழிவுகளை நவீன முறையில் தரம் பிரித்து மறு உபயோகப்பொருட்களாக தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
÷அதற்காக, விஞ்ஞான முறையில் குப்பைகளிலிருந்து பன்முக உபயோகப் பொருட்க ளாகத் தயாரிக்கும் நவீன திட்டத்தை ஹேன்ஜெர் என்ற நிறுவனம், திருப்பூர் மாநகராட்சியில் அளித்துள்ளது. மும்பை, சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகளை தரம் பிரித்து பசுமை மின்சாரம், பசுமை உரம், மணல் மற்றும் மறுசுழற்சியில் மீண்டும் அதேபொருட்களாக உற்பத்தி செய்யும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
÷இந்நிறுவனத்தின் பிரதிநிதி கிருஷ்ணா சைதன்யா வியாழக்கிழமை நடைபெற்ற திருப் பூர் மாநகராட்சி கூட்டத்தில் இதுகுறித்து ஒளிப்படக் காட்சி மூலம் விளக்கம் அளித்தார். அவர் கூறியது:
÷இந்த ஆலைக்குள் கொண்டுவரப்படும் குப்பைகளை 4 பிரிவாக தரம் பிரித்து அதில் 25 சதம் மின்சாரமாகவும், 30 சதம் பசுமை உரமாகவும், 20 சதவீதம் மறுசுழற்சி முறையில் மீண்டும் பிளாஸ்டிக், 15 சதம் மணலாகவும் உற்பத்தி செய்யப்படும். மீதம் பயன்படுத்த முடியாத 10 சதவீத கழிவுகள் விஞ்ஞான வழிமுறையில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படும். இதனால், நிலத்தடி நீர் மாசுபடுவது தவிர்க்கப்படும்.
÷குப்பையில் இருந்து மறுசுழற்சிமுறை உற்பத்தி முழுவதும் மூடிய நிலையிலேயே நடைபெறுவதால் வெளிப்புறத்தில் சுகாதார பாதிப்போ, துர்நாற்றமோ ஏற்பட வாய்ப்பில்லை. இத் திட்டத்தில் குப்பைகள் அப்புறப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் சேலம் மாநகராட்சியில் நடைபெறுகின்றன. விரைவில் அதுவும் செயல்பட்டுக்கு வரும், என்றார்.
÷இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மேயர் க.செல்வராஜ் தெரிவித்தார். துணை மேயர் கே.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி ஆகி யோர் உடனிருந்தனர்.