தினமணி 23.03.2013
தினமணி 23.03.2013
விடுபட்ட வீடுகளின் கழிவுநீரை புதை சாக்கடையில் இணைக்க நடவடிக்கை
புதுச்சேரி உருளையான்பேட்டை பகுதியில் விடுபட்ட
வீடுகளின் கழிவுநீர் இணைப்பையும் புதைசாக்கடைக் குழாயில் இணைக்க நடவடிக்கை
எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உருளையான்பேட்டை தொகுதியில் பொது சுகாதாரத்தை வலியுறுத்தி, நோய் பரவாமல்
தடுப்பது குறித்தும், புதைசாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில்,
கழிவுநீரை வாய்க்கால்களில் விடாமல் தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை
அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
நோய்கள் பரவாமல் தடுக்க வீதிகளில் உள்ள வாய்க்கால்களில் கழிவுநீர்
விடுவதைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்
பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
மேலும் வீடுகளில் இருந்து இன்னமும் புதைசாக்கடை குழாய்க்கு கழிவுநீர்
இணைப்பு தராதவர்களை வருவாய்த்துறை மூலம் எச்சரித்து நடவடிக்கை எடுக்கவும்
பரிந்துரைத்தார்.
கூட்டத்தில், அரசு கொறடா ஜி.நேரு, துணை ஆட்சியர் வின்சென்ட் ராயர்,
சுகாதாரத்துறை இயக்குநர் கே.வி.ராமன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்
மனோகர், உள்ளாட்சித்துறை இயக்குநர் ரவிபிரசாத், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், வருவாய் அதிகாரி சக்திவேல்,
வட்டாட்சியர்கள் ரமேஷ், தில்லைவேல், அமைச்சரின் தனிச் செயலர் அசோகன்,
சுகாதாரத்துறை துணை இயக்குநர் காளிமுத்து, பொதுசுகாதாரக் கோட்ட
செயற்பொறியாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.