தினமலர் 05.12.2013
விதிமீறல் கட்டட ‘சீல்’ அகற்றியவர் மீது புகார்
மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அனுமதி இன்றி அகற்றப்பட்டது குறித்து, போலீசில் புகார் செய்ய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் பஜார் சாலையில் மனை எண், 7,8 ஆகியவற்றுக்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட, மூன்று மாடி வணிக கட்டடத்தில், விதிமீறல் இருப்பதாக, கடந்த நவ.,27ம் தேதி, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அனுமதி இன்றி ‘சீல்’ அகற்றப்பட்டதாக புகார் எழுந்தது.
அதன் எதிரொலியாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கட்டடத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்பட ஆதாரங்களை சேகரித்தனர்.
அதுகுறித்த அறிக்கை சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது அனுமதி கிடைத்தவுடன், போலீசில் புகார் செய்ய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.