தினமலர் 25.01.2010
விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் அனுமதியில்லாத காட்டேஜ்களுக்கு நோட்டீஸ்
கொடைக்கானல் : விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் குறித்து நகரமைப்பு ஆய்வாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்கீகாரமில்லாத காட்டேஜ்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
கொடைக்கானலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்தவும்,1993ம் ஆண்டு மாநில அரசால் “மாஸ்டர்பிளான்‘ சட்டம் கொண்டு வரப்பட்டது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு உத்தரவின் அடிப்படையில்,கடந்த 2004ம் ஆண்டு நகராட்சி கணக்கெடுப்பில் விதிமுறைகளை மீறி 1553 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.மாநில அரசின் உத்தரவுப்படி மீண்டும் கணக்கெடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.விதிமுறை மீறல் குறித்து கமிஷனர் தலைமையில் பிற மாவட்ட நகரமைப்பு ஆய்வாளர்கள் குழு சில வாரங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறுகையில்,” அரசு உத்தரவுப்படி,விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ள 1553 கட்டடங்களில் விடுபட்டது குறித்து மீண்டும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் காட்டேஜ்களால் நகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க,காட்டேஜ்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. வணிக ரீதியான வரிக்கு மாறாமல் இருக்கும் 40 காட்டேஜ்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது‘ என்றார்.