தினகரன் 10.11.2010
விருத்தாசலம் வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
விருத்தாசலம், நவ. 10: விருத்தாசலம் நகரில் ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையம் அருகில், கடை வீதி, கடலூர் ரோடு ஆகிய இடங்களில் ஓடை, வடிகால் ஆக்கிரமிப்பு களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் நகரில் வடிகால், ஓடைகள் ஆக்கிர மிக்கப்பட்டதால் மழைநீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. விருத்தாசலம் நகரில் முக்கிய இடங்களாக கடை வீதி, கடலூர் ரோடு, பேருந்து நிலையம், ஜங்ஷன் ரோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் போது மழை நீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் கார், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலை எது, பள்ளம் எது எனத்தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடக்கிறது. கடந்த சில நாட்கள் முன்பு இரவு பெய்த மழையால், சாலைகளில் ஆறு போல் மழைநீர் ஓடியது.
பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பத்திற்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்து எழுந்து சென்றது பரிதாபமாக இருந்தது. சாலையில் நடக்கவே சிரமப்படும் நிலை இருந்தது.
வடிகால், ஓடைகள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதுதான். விருத்தாசலம் நகரில் முக்கியமாக ஆலடி ரோட்டில் உள்ள வெள்ள நீர் வடிகால் ஓடை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையம், கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், வடிய வழியில்லாமல் சாலையில் ஓடுகிறது.
ஓடை கரையில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்கிறது. கடந்த ஆண்டு இந்த ஓடையில் ஆக்கிரமித்து பாத்ரூம் கட்டியிருந்த வீட்டில் தங்கி இருந்த சத்தியா என்ற இளம்பெண் சுவர் இடிந்து பரிதாபமாக இறந்தார். அப்போது நகராட்சி சார்பில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் தலைமையில், ஆக்கிரமிப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடத்தப்பட்டு, அதில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்பு நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அளந்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் தேதியும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. அதற்கு பிறகு நகராட்சி நிர்வாகம் அதற்கான முயற்சியில் கூட இறங்காதது பொதுமக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் ஆர்வம் காட்டிய நகராட்சி நிர்வாகம், அதை கிடப்பில் போட்டதற்கான காரணம் இன்று வரை சிதம்பர ரகசியமாகவே உள்ளது. இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கி விட்டது, பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். எனவே நகராட்சி நிர்வாகம் ஜங்ஷன் ரோடு, கடை வீதி, பேருந்து நிலையம் அருகில், கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் குப்பை கூளங்களால் நிரம்பி காணப்படுகிறது.