தினமணி 27.11.2009
விரைவில் இணையதளம் மூலம் பிறப்புச் சான்று: அமைச்சர் தினேஷ் திரிவேதி

புதுதில்லி, நவ. 26: இணையதளம் மூலம் பிறப்புச் சான்று பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
சுகாதாரம் தொடர்பான தகவல்கள் அடங்கிய தேசிய இணையதளம் விரைவில் தொடங்கப்படும். அதில் ஒவ்வொருவரது பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்வதன் மூலம் பிறப்புச் சான்று கேட்டு உள்ளாட்சி அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் இணையதளம் மூலமே விண்ணப்பித்து, பிறப்புச் சான்று பெற முடியும் என்று அவர் கூறினார்.
குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்க இ ஹெல்த் கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
எந்த மாதிரியான சுகாதாரப் பிரச்னையையும் நம்மால் எதிர்கொண்டு சமாளிக்க முடியும்.
ஆனால் சுகாதாரம் குறித்த நமது கண்ணோட்டம் தான் மாற வேண்டும் என்று அவர் கூறினார். நோயைப் பற்றியேதான் நாம் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம். சுகாதாரத்தைப் பற்றி பேசுவதில்லை. சத்தான உணவு, கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர் ஆகியவையே சுகாதாரத்தின் அடிப்படை என்றார் அமைச்சர்.
கருத்தரங்கில் நோபல் பரிசு பெற்ற கனடா நாட்டு பேராசிரியர் கிறிஸ்டி டுன்கன் பேசினார். பன்றிக் காய்ச்சல் இன்னும் அச்சுறுத்தும் நோயாகவே உள்ளது. தற்போது வைரஸின் தாக்கு திறன் தீவிரமாக இல்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் தீவிரமாவதற்கு வாய்ப்பு அதிகம் என்று அவர் எச்சரித்தார்.